அநுராதபுரத்தின் கலை வரலாற்றின் வரலாற்றெழுத்தியல்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
வரலாற்று எழுத்தியல் என்பது கடந்த கால வரலாற்றுச் சம்பவங்கள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன அல்லது எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்பதனை வாசிப்பதாக அமையும். அந்தவகையில் கடந்த காலச் சம்பவங்கள் பற்றிய வேறுபட்ட நோக்கு நிலை அவதானங்களை வரலாற்று எழுத்தியல் கொண்டிருந்தும் சிங்கள நாகரிகத்தின் ‘தொட்டில்’, ‘தொல்பொருள் தலைமையகம்’, ‘சிங்களக் கலைக் காலம்’, ‘பொற்காலம்’ மற்றும் ‘யுகம்’ எனவெல்லாம் போற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களால் அநுராதபுர வரலாறு(கள்) அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டன. இவ்வகையில், இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றான அனுராதபுரம், அதன் வளமான கலாசார பாரம்பரியத்திற்காகவும், தெற்காசியாவில் பௌத்தக் கலை மற்றும் கட்டடக்கலை வளர்ச்சியில் அதன் பங்களிப்பிற்காகவும், அதேசமயம் மேற்படி வரலாற்று எழுத்துக்களினூடாக அதற்கு உருவாக்கித் தரப்பட்ட கருத்ததிகாரம் காரணமாகவும் இவ்வரலாற்றுக் காலம் பெரும் புகழினைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இத்தகைய பின்னணியில், இலங்கைக் கலையின் வரலாற்று எழுத்துக்களைப் பற்றி பேசும் பொழுது அனுராதபுர காலப் பகுதியானது தவிர்க்கமுடியாத ஒன்றாகக் காணப்படுகிறது. ஏனெனில் பண்டைய காலம் முதல் சமகாலம் வரையிலான வரலாற்று எழுத்துக்களின் அரசியலின்; மையக் கருப்பொருளாக அனுராதபுரம் உள்ளது. எனவே அது வரலாற்று எழுத்துக்களில் பிரதான பேசு பொருளாகத் தொடர்ந்து பயணம் செய்கிறது. இவ்வகைப்பட்ட பின்னணியில் இலங்கை வரலாற்று வாசிப்பில் அனுராதபுரத்தை நிறுத்தி அதன் வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ள முறையைக் கட்டவிழ்ப்பு செய்தல் என்பது ஓர் இன்றியமையாத புலமைத்ததுவத் தேவையாக உள்ளது. காலனியவாதிகள் முதல் இலங்கைச் சுதேசிகள் வரை இப்பிரதேசத்தை மையப்படுத்தி எழுதியவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது என்பது இதன் அடிப்படையான தேவைப்பாடகக் காணப்படுகிறது. அதேவேளை பெரும்பாலான அனுராதபுரம் குறித்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது அவற்றையும் இணைத்த பாட ரீதியான வாசிப்பு தமிழ்மொழி மூலமான அனுராதபுரம் பற்றிய அறிவை மேலும் விஸ்தரிக்கவும், புரிந்து கொள்ளவும் உதவும். அனுராதபுரக் கலை வரலாற்றைச் சிறப்பு உரைகல்லாகக் கொள்ளும் இவ் வாசிப்பு அதன் பொதுப்போக்கை கலை வரலாற்றை மையப்படுத்தி விசாரிப்பதாக அமையும். இவ் ஆய்வானது நேர்காட்சிவாதமற்ற அணுகுமுறையில் பண்புசார் முறையிலான தரவு சேகரிப்பில் முதலாம் நிலைத் தரவுகளை மையமாகக் கொண்ட, அநுராதபுரக் கலை வரலாறு பற்றி எழுதப்பட்டுள்ள எழுத்துக்களது வெவ்வேறு பனுவல்களை வாசிக்கிறது. இவ்வகையில் நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், சஞ்சிகைகள் இணையதள ஆய்வுக் கட்டுரைகள். போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டும், பின் நவீனக் கோட்பாட்டு அணுகுமுறைகள் சார்ந்த பூக்கோவின்- கருத்தாடல், அதிகாரம் பற்றிய சிந்தனைகள், தெரிதாவின் கட்டுடைப்புவாதம் மற்றும் லியோத்தரின் பெருங்கதையாடல் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் பனுவல் மற்றும் கருத்தாடல் பகுப்பாய்வு அடிப்படையிலான கலப்பு முறையிலான விபரிப்பு ஆய்வினை மேற்கொள்ள முயல்கிறது. வரலாறு மற்றும் கலை வரலாறு இரண்டையும் எவ்வாறு பொருள் விளங்கிக்கொள்வது? இலங்கை வரலாற்று எழுத்தியல் யாருடைய பார்வையில் யாருக்காக எழுதப்படுகிறது? இலங்கை வரலாற்று
எழுத்துக்களில் எவ்வாறான கலை வரலாறு எடுகோள்கள் கையாளப்பட்டுள்ளன? இலங்கையின் வரலாற்று காலமானத்தில் அனுராதபுரக் காலத்திற்குக் கொடுக்கப்படும் பொற்கால சிறப்புரிமைக்கு பின்னால் எவ்வாறான கருத்தாடல்கள் இயங்கியுள்ளன? எவ்வாறு அனுராதபுரக் கலை வரலாறு திசை திருப்பப்பட்டு தேசியமயமாக்கப்படுகிறது? அநுராதபுரம் பற்றிய வரலாற்று எழுத்துக்களின் பின்னுள்ள கலை வரலாற்றின் பண்பாட்டு அரசியலை எப்படி கண்டறிவது? போன்ற வினாக்கள் ஊடாக அநுராதபுரம் பற்றிய அறிவை உருவாக்கியுள்ள வரலாற்று எழுத்தியலின் கருத்தாடல்களின்
அடிப்படைகளைக் கட்டவிழ்த்து நோக்குதலை அடிப்படையாகக்கொண்டுள்ளது. அவ்வகையில் வரலாற்று எழுத்துக்களில் தாக்கம் செலுத்தும் சமூக-அரசியல் சூழமைவு பற்றிய கேள்விகளுக்கு விடை காண இவ்வாய்வு முயல்கிறது.