இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கூலித்தொழில் செய்யும் குடும்பங்களிடையே உணவுத் தெரிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: ஓர் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
குடும்பங்களிற்கான சமநிலையான உணவுத் தெரிவை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது மக்களின் உணவிற்கான நுகர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் கூலித் தொழில் செய்யும் குடும்பங்களின் உணவுத் தெரிவில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்வதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. இந்த ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன ஊறணி 176F கிராம சேவகர்ப்பிரிவில் உள்ளடங்கும் சின்ன ஊறணிக் கிராமத்தை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக சின்ன ஊறணிக் கிராமத்தில் வசிக்கும் 562 கூலித் தொழில் செய்யும் குடும்பங்களில் இருந்து 10% மான 60 குடும்பங்கள் எழுமாற்று மாதிரி எடுப்பைப் பயன்படுத்தி ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்விற்காக முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு மூலங்களான அரைக்கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து, உணவு நாளேடு, நேரடி அவதானம், நேர்காணல், கலந்துரையாடல் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டதுடன் இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு மூலங்களும் ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் போது சேகரிக்கப்பட்ட புள்ளி விபரவியல் ரீதியான தரவுகள் Microsoft Excel மென்பொருளைப் பயன்படுத்தி புள்ளிவிபரவியல்நுட்ப பகுப்பாய்விற்கும், சேகரிக்கப்பட்ட பண்பு சார்ந்த தரவுகள் விளக்கப் பகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பட்டு அளவு சார் விபரண ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவுகளைப் பகுப்பாய்வு செய்து பெறப்பட்ட முடிவுகளாக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் குறைந்த வருமானம் பெறும் கூலித் தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களில் 83% குடும்பங்கள் உணவிற்காக கடனைப் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் கூலித் தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களிடையே உணவின் பல்வகைத்தன்மை குறைந்துள்ளதுடன் இறைச்சி, பால்மா, பழங்கள், முட்டை போன்றவற்றின் நுகர்வும் குறைவடைந்துள்ளது. அத்துடன் குடும்பங்களின் உணவுத் தெரிவின் போது உணவுப் பொருட்களின் அளவைக் குறைத்து வாங்குதல், விலை குறைவான பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளைக் கையாளுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் உணவு நுகர்வில் ஏற்பட்ட மாற்றங்களினால் பால்மா, பழங்கள், இறைச்சி, முட்டை, மரக்கறி போன்றவற்றில் காணப்படும் போசணைகளும் போதியளவு கிடைக்கப்பெறவில்லை. அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 62% மான குடும்பங்களில் வளர்ந்தோர் பிரதான உணவு வேளைகளைத் தவிர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக 86% மான குடும்பத்தினர் காலை உணவு வேளையைத் தவிர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இடைவேளை உணவான சிற்றூண்டி வகைகளின் நுகர்வும் தவிர்க்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாகக் காணப்படுகின்றன. ஆய்விற்கான பரிந்துரைகளாகக் குறைந்த வருமானம் பெறும் கூலித் தொழில் செய்யும் குடும்பங்களிற்கு வாழ்வாதாரத்தை ஈட்டக்கூடியதும், போசணையான உணவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதுமான கால்நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் போன்ற செயற்திட்டங்களை ஊக்குவிப்பதுடன் சுகாதார அமைச்சுடன் இணைந்து பாடசாலை, பிணியாய்வு நிலையங்களில் போசணையான உணவுத் தெரிவு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.