தமிழ் பொது வேட்பாளர் எண்ணக்கருவும் நடைமுறையும் : 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Election Commission of Sri Lanka
Abstract
ஜனநாயக அரசியல் களத்தில் வாக்காளர்களின் பலம் தேர்தல் மூலமே வெளிப்படுவது யதார்த்தமாகும். விருப்பத்தெரிவே ஜனநாயகம் என்ற கோட்பாடு பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் முதன்மைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றுதுறைக்கான ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரக்ஞையாக தமிழ் பொது வேட்பாளர் அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் பொது வேட்பாளர் என்பது 2010ஆம் ஆண்டிலிருந்து கருத்தியல் தளத்தில் உரையாடலை மாத்திரம் கொண்டிருந்த போதிலும் அதற்கான நடைமுறைத்தன்மை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் உருப்பெற்றது. இது 1978ம் ஆண்டு அரசியல் யாப்பின் உள்ளடக்கமான ஜனாதிபதித் தேர்தல் என்ற சட்டத்திற்கூடாகவே முன்வைக்கப்பட்டது. இந்த எண்ணக்கருவுருவாக்கம் தமிழ் மக்களின் கூட்டு பலத்திற்கான வெளிபாட்டின் ஒன்றாக தென்பட்டது. அதனைக்கடந்து ஜனாதிபதியாக ஒரு தமிழ் பொது வேட்பாளர் வெற்றி பெறுதல் என்ற நியமத்துக்குள் முன்னிறுத்தப்பட்டதல்ல. இவ்வகை எண்ணம், பெரும்பான்மை அதிகார கட்டமைப்பினதும் அதன் அடிப்படையில் இயங்கிவரும் ஆட்சியாளர்களும் சிறுபான்மை தேசிய இனம் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கும் மறுபக்கத்தில் தமிழரின் உரிமை எதனையும் வழங்க மறுத்தமை ஏற்படுத்தப்பட்டதன் ஒரு விளைவாக காணப்படுகிறது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. இதன் பிரகாரம் தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெற்றது. இதன் பெறுபேறு ஈழத்தமிழர்கள் தமிழ் தேசியமாக இருத்தல் என்பதை உறுதிப்படுத்துதலேயாகும். அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கை தாயகமாக கொண்டிருத்தல் என்பதையும் ஐக்கியமாகவும் தேசியமாகவும் ஒருமைப்பாட்டுடனும் திரட்சியான வெளிப்படுத்தலை நோக்கமாகக் கொண்டதாகுவுள்ளது. இதனூடாக சுயநிர்ணயத்திற்குட்பட்ட அரசியல் தீர்வை வேண்டி நிற்கும் இனமாக தமிழ் மக்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியிருந்தனர். இந்த அடையாளப்படுத்தலானது தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. இதன்படி இவ்வாய்வின் பிரதான நோக்கமாக ஈழத்தமிழர்களின் அரசியலில் வடக்கு கிழக்கு தழுவிய தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் நடத்தை ஏற்படுத்திய விளைவுகளை மதிப்பிடலும், துணை நோக்கமாக, ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் திரட்சிக்குமான வாய்ப்புக்களை அடையாளப்படுத்துதல் சார்ந்து ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முறையிலாக விமர்சன யதார்த்தவாதம் மற்றும் விபரண ஆய்வு முறையியலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விமர்சன யதார்த்தவாதம் மூலமாக சமூக கட்டமைப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் என்ற கருத்தியல் ஏற்படுத்திய மாற்றத்தை அறிய உதவுறது. பொது வேட்பாளர் சார்ந்த நடைமுறை தன்மையினை விபரமாக அறிதலின் பிரகாரம் விபரண ஆய்வு முறையியல் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாய்வின் பெறுபேறாக, தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கரு தமிழ்த் தேசிய கருத்தியலின் குறியீடாகவும், தமிழ் மக்களின் தேசிய அபிலாணியின் அங்கமாகவும், தமிழ் மக்களின் திரட்சியை கட்டமைக்கும் கருவியாகவும் செயற்பட்டது என்பதுடன் இந்த எண்ணக்கருவாக்கத்திற்கு வடக்கு-கிழக்கு தளுவிய தாயக தமிழர்கள் உட்பட தென்னிலங்கை தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் சர்வதேச ரீதியாக கிடைத்தது. முடிவாக, உலகத்தமிழ் மக்களில் பெருமளவானோரின் திரட்சியுடன் வலுப்படுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளருக்கான தேர்தலின் போதான நிலைப்பாடு பெரும்பாலும் வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவை பொது வேட்பாளர் பக்கம் சார்படையச்செய்திருந்தது. இச்சார்பானது தமிழ்த்தேசியம் என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இயங்கியமையே தமிழ் பொது வெட்பாளர் என்ற எண்ணக்கருவிற்கும் அதன் நடைமுறைக்குமான சாத்தியப்பாடுகளை 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற காரணமாகியது.