வானொலியில் தமிழ்மொழியின் கையாளுகை

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Arts University of Jaffna, Sri Lanka

Abstract

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் சிறப்புக் கலைமாணி இறுதியாண்டுப் பரீட்சையின் இறுதிப்பகுதியைப் பூர்த்திசெய்யும் முகமாக “வானொலியில் தமிழ்மொழியின் கையாளுகை” எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்பாடல் துறையில் வானொலி என்பது தனித்துவமான வகிபாகத்தைக் கொண்டுள்ளது. ஒலிப்படிமங்களை உருவாக்கி, சமுதாய நோக்கிலே கலைத்துவம் தழுவிய தொடர்பாடல் ஆக்கமொன்றே வானொலியாகும். இது மக்கள் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அவர்களின் விருப்புக்களை நிறைவேற்றும் ஒரு சாதனமாகவும் காணப்படுகின்றது. இலங்கை வானொலிகளின், இன்றைய போக்குநிலையைப் பொறுத்தவரையில் பல மாறுதல்களைக்கொண்டமையால் அவை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படக்கூடியதொன்றாக அமையப்பெறுகின்றது. 1990 களின் பின்னர், வானொலி என்ற ஊடகத்திற்கும் மக்களுக்குமான தொடர்புநிலையில் விரிசல் ஏற்படத்தொடங்கியது. இதில் மக்களின் விருப்பு, வெறுப்புக்களைக் காட்டிலும், விளம்பரதாரர்களின் திருப்தி முக்கியமான ஒரு நிபந்தனையாக மாறத்தொடங்கியது. சமூகத்தில் வானொலிகளின் நிலையான தன்மையை அடைந்துகொள்ள தனியார் வானொலிகளும் முனைப்புடன் ஈடுபடத்தொடங்கின. சமுதாயப்பணியை மறந்து பொழுதுபோக்கு என்ற ஆயுதத்தை தோட்டாவாகக்கொண்டு, முனைப்புடன் போர் நடாத்தி மொழியினைக்கொன்று குவிப்பதுடன் போரில் வெற்றியும் காண்கின்றன. இதனால் வானொலியின் செந்நெறியும் மாற்றியமைக்கப்படுகின்றது. ஆய்வின் பிரதான நோக்கமாக, இலங்கை வானொலித்துறையில் இன்று தமிழ் மொழி எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதனை தெளிவுபடுத்துவதாக அமையப்பெறுவதுடன் வானொலித்துறையில் தமிழ் மொழியின் கையாளுகையில் உள்ள பிரச்சினைகள், அப்பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிதல் மற்றும் ஆராய்தல் என்பனவற்றை உபநோக்கங்களாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முதலாம் நிலைத்தரவுகளாக, அவதானங்களினால் பெறப்பட்ட தகவல்கள், அறிவிப்பாளர்களின் நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் என்பனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக, ஊடகங்கள், மொழிகள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், ஆய்வுக் கோவைகள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளத் தரவுகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயன்றவரை ஆய்வுக்குத் தேவையான தகவல்களைத்திரட்டி பயன்தரக்கூடிய ஆய்வாக மேற்கொண்டுள்ளமையினால் இவ்வாய்வு யாவருக்கும் பயன்தரக்கூடியதாகவும் இதனோடு தொடர்புடைய ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By