சமூக விமர்சனமாக இலக்கியம்: அலெக்ஸ் பரந்தாமனின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட வாசிப்பு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
இந்த ஆய்வானது ஈழத்து நவீன இலக்கியப் பயில்பரப்பில் மிக முக்கியமான ஒரு படைப்பாளியாக மேற்கிளம்பும் அலெக்ஸ் பரந்தாமனின் படைப்புகள் மற்றும் அவற்றின் தத்துவ அழகியல் அடிப்படைகள் குறித்த ஒரு புலமைத் தலையீடாக அமைகின்றது. ஈழத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறிய யுத்தமானது, ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தினுடைய வாழ்க்கையின்அனைத்து அம்சங்களையும் நிச்சயமற்றதாகவும் கேள்விக்குரியதாகவும் மாற்றியது. இதன் காரணமாக ஒடுக்குமுறைக்குள்ளான இந்தச் சமூகம், தங்களது பண்பாட்டு இருப்பிற்கும் பேண்தகு அபிவிருத்திக்குமான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் அந்தச் சமூகம் குறித்த எழுத்துகளும், எழுத்துகள் பற்றிய வாசிப்புகளும் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய எழுத்துக்களை வெளிக்கொண்டுவந்தவர்களுள் அலெக்ஸ் பரந்தாமன் மிக முக்கியமானவர். அந்தவகையில் தான் வாழும் சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் திறன் கொண்ட அலெக்ஸ் பரந்தாமன் ஒரு நாவல், நான்கு சிறுகதைத் தொகுதி, இரண்டு கவிதைத் தொகுதி என ஏழு படைப்பிலக்கியங்களை எழுதியுள்ளார். இதனால் அவர் ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கவியலாத ஒரு ஆளுமையாக நிலைபெறுகின்றார். ஆனால் இவருடைய எழுத்துகளை முன்னிறுத்தித் தனியான, கோட்பாட்டு ரீதியான, விரிவான ஆய்வுகள் எதுவும் இன்றுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. அருந்தலான மற்றும் மேலெழுந்தவாரியான சில குறிப்புகளுக்கு அப்பால் முழுமையான ஆய்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் அவரது படைப்புகள் குறித்தும், ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் அவர் பெறும் இடம் குறித்தும் மதிப்பிட முடியாதுள்ளமை இந்த ஆய்வின் மிக முக்கியமான ஆய்வுப் பிரச்சினையாக இனங்காணப்படுகிறது. எனவே இவருடைய சிறுகதைகளை சமூக விமர்சனம் மற்றும், அழகியல் கோட்பாட்டு அடிப்படையில் அணுகி ஆராய்வதன் மூலம் அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகப்பார்வை மற்றும் அழகியல் அடிப்படைகளை வெளிக்கொணர்வதுடன் ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் இவருக்குரிய வகிபங்கு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் இந்த ஆய்வு அமைகிறது. முப்பது ஆண்டுகால யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு சமூகம் குறித்த இவ்வாறான எழுத்துகளும், எழுத்துகள் பற்றிய வாசிப்புகளும், ஆய்வுகளும் ஒருவகையில் ஒடுக்குமுறைக்கெதிரான அறிவார்ந்த போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் அமைகிறது எனலாம்.