உளவியல் நோக்கில் கிராமிய வழிபாடும் இளைஞர்களும்

Abstract

கிராமப்புறங்களில் சிறு தெய்வங்களுக்கு மரபுரீதியாக நம்பிக்கையின் அடிப்படையில் பக்தியோடு ஆற்றப்படும் சடங்கு முறைகள் கிராமிய வழிபாடாகும். சமூக மாற்றச் செயற்பாட்டின் போது சமூகங்களின் பாரம்பரிய மரபுகளையும் வழக்காறுகளையும் தாங்கியவையாக சடங்குகள் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் நவநாகரிக தொழினுட்ப செயற்பாட்டால் இக்கிராமிய வழிபாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை சமகாலத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது. அதேவேளை கிராமிய வழிபாடு மக்களின் மனப்பாங்கில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் கிராமிய வழிபாடுகளை இனங்காண்பதோடு கிராமிய வழிபாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உளவியல் மாற்றத்தினையும் ஆராய்வதாகவும் தற்காலத்தில் கிராமியச் சடங்குகள் மேனிலையாக்கமடைந்து வருவதனையும், அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளும் இவ்வாய்வில் விளக்கப்பட்டுள்ளன. உளவியல் நோக்கில் கிராமிய வழிபாட்டினதும் இளைஞர்களின் தொடர்பினையும் ஆராய்வதனை முதன்மை நோக்கமாகவும் சடங்கில் ஈடுபடும் இளைஞர்களின் உளவியல் மாற்றத்தினை இனங்காண்பதனை துணை நோக்கமாகவும் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இன்றைய சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலும் மேனிலையாக்கம் எனும் கருத்தியலின் வழி கிராமியத் தெய்வக் கோயில்கள் ஆகமக் கோயில்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதேவேளை இன்றைய உலகம் தொழினுட்ப உலகமாக தன்னை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் எங்களுடைய பாரம்பரிய சடங்குகளான கிராமியச் சடங்குகள் தற்கால இளைஞர்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்றதா? அல்லது கிராமிய வழிபாடு பற்றிய இளைஞர்களின் கருத்தியல் நிலை எவ்வாறு இருக்கின்றது அது அவர்களுடைய எவ்வகையான மனப்பாங்கைக் காட்டுகின்றது என்பதனையே ஆய்வுப் பிரச்சனையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது விபரண ஆய்வு முறைக்கு அமைவாக கட்டமைக்கப்படவுள்ளது. தரவுகள் கள ஆய்வு உத்தி முறைகளான நேர்காணல், உற்றுநோக்குதல் மற்றும் வினாக்கொத்து போன்றவற்றின் ஊடாக பெறப்பட்ட தரவுகள் ஆய்வின் உண்மைத் தன்மையை கருதி உள்ளடக்கப்பட்டு இணைவுக் குணகம் (SPSS பகுப்பாய்வு) முறைக்கு உட்படுத்தி முடிவுகள் பெறப்படவுள்ளன. மேலும் அளவுசார் பகுப்பாய்வு, அணுமானப் பகுப்பாய்வு மற்றும் பண்புசார் பகுப்பாய்வு முறைகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறுபட்ட காரணங்களினால் சமூக ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இக்கிராமிய சடங்குகளைப் பின்பற்றுகின்ற பொழுது உளவியல் ரீதியான மாற்றங்களை கையாளக் கூடிய தன்மை காணப்படுகின்றது. ஆகவே கிராமிய வழிபாட்டுச் சடங்குகளை பழமை மாறாது பின்பற்றப்பட வேண்டும். பாடசாலை மட்டத்திலும் கிராமிய வழிபாடு தொடர்பான தெளிவினை ஏற்படுத்த வேண்டும். இவ்வாய்வானது இளைஞர்களுக்கும், பூசகர்களுக்கும், கிராமிய வழிபாடு தொடர்பான எதிர்கால ஆய்வாளர்களுக்கும் உதவியாக அமையும்.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By