தற்கொலையினால் காவுகொள்ளப்பட்டுள்ள மனித உயிர்களும் சவால்மிக்க காலப்பகுதிகளில் கத்தோலிக்கத் திரு அவையின் செயற்பாடுகளும் (மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்திய கள ஆய்வு 2009 - 2022)

Abstract

போருக்குப் பிற்பட்ட காலப்பகுதியானது பெரிதும் சவால்மிக்கதாக அமைந்துள்ளது. 2009 - 2022ம் ஆண்டு காலப்பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை வீதமானது அதிகரித்துள்ளது. தற்கொலையினால் மாண்புமிக்க மனித உயிர்கள் அதிகமாக காவுகொள்ளப்பட்டுள்ளதை வெளிக்கொணர்வது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். அதனைத் தடுப்பதற்காக கத்தோலிக்க திரு அவையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை இவ்வாய்வு ஆய்விற்குட்படுத்துகிறது. ஆய்வுப்பிரச்சினையாக பின்வரும் விடயங்கள் அமைந்துள்ளன. அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெறுவது குடும்பங்களில் பல சிக்கல்களையும் நிம்மதியற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் தற்கொலை பற்றிய விழிப்புணர்வுச் செயற்பாட்டு திட்டங்கள் மிகக் குறைவாக உள்ளது. தற்கொலை மூலமாக உயிரை காவுகொள்ளச் செய்வதில் இளைஞர்கள், யுவதிகள் முதலிடத்தில் உள்ளார்கள். ஆய்வின் இலக்குகளாக இரண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைக்கான காரணிகளைப் பகுப்பாய்வு செய்தல். தற்கொலையைத் தடுப்பதற்கான செயற்பாட்டில் கத்தோலிக்க திரு அவையின் பங்கினை அடையாளம் காணுதல். மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உயிரின் மாண்பினை நிலைநாட்டுகின்ற செயற்பாடுகளை கத்தோலிக்க திரு அவை மேற்கொண்டு வருகின்றது. தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அடையாளப்படுத்தி நடைமுறைப்படுத்துவது இறைசாயலாகப் படைக்கப்பட்டவர்களுடைய கடமை என்பது ஆய்வின் கருதுகோளாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வில் தொகுத்தறிவு மற்றும் தோற்றப்பாட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள தற்கொலையின் எண்ணிக்கை, காரணங்கள், காவுகொள்ளப்பட்டுள்ள பாலினம் போன்ற தரவுகளை சேகரித்தல். இதற்காக பொலிஸ் நிலையம் மற்றும் போதனா வைத்தியசாலையின் அறிக்கைகளை மையப்படுத்தி தரவுகள் பெறப்படுதல். மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற எகெட் நிறுவனமானது தற்கொலையைத் தடுப்பதற்காக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்பதை ஆய்விற்கு உட்படுத்துதல். திருவிவிலியம், இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி ஏடு மற்றும் சுற்றுமடல்களில் மனித உயிரின் மாண்பு மற்றும் தற்கொலையைத் தடுத்தல் தொடர்பான தரவுகளை உள்வாங்குதல். பிரதான சமயங்கள் கூட தற்கொலையைத் தடுத்தல் அவசியம் என்பதனை புனித நூல்கள் வாயிலாக வலியுறுத்pயுள்ளன. ஆகவே மனித உயிரானது மாண்புமிக்கது; விலைமதிப்பற்றது என்பதனை இவ்வாய்வினூடாக அடையாளம் காண முடிகின்றது. இவ்வாய்வு தற்கொலையை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான முன்னெடுப்புக்கள் மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் பற்றிய முன்மொழிவுகளைத் தருவதாகவும் அமைந்துள்ளது. மனித உயிரின் மாண்பு தொடர்பான பிரக்ஞையை ஆழப்படுத்துகின்றது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By