மலையகப் பழமொழிகள்: இனவரைவியல் நோக்கு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
ஈழத்துத் தமிழ் நாட்டார் பண்பாட்டுப் பிராந்தியங்களுள் ஓர் உயிர்ப்புள்ள மிக முக்கியமான பண்பாட்டுப் பகுதியாக மலையகம் விளங்குகின்றது. தமது பண்பாட்டு வேர் மூலங்களிலிருந்து பிடுங்கப்பட்டு காலனியாதிக்கத்தால் இலங்கையில் குடியமர்த்தப்பட்டதன் மூலம் மலையகச் சமூகமானது வரலாற்றுப்புறத்தியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மலையக சமூகத்திற்கு இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்று உருவாக்கத்திலும் கலை இலக்கிய வரலாற்று உருவாக்கத்திலும் முக்கியமான பங்கு உண்டு. மலையகத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தினையும் இருப்பினையும் வெளிப்படுத்துவதில் நாட்டார் வழக்காறுகள் பிரதான இடம் வகிக்கின்;றன. நாட்டார்; வழக்காறுகளுள் வாய்மொழி வழக்காற்று வகைமைக்குள் அடங்கும் பழமொழிகள், மலையக மக்களின்; பண்பாட்டு அடையாளங்களைப் பதிவுசெய்யும் முக்கிய ஆவணங்களாகக் காணப்படுகின்றன. மலையகத்தின் ஏனைய நாட்டார் வழக்காற்று வகைமைகள்; ஆய்வுப்புலத்தில் குறிப்பிடத்தக்களவு கவனம் பெற்றுள்ளன. ஆனால் மலையகத்தின் பழமொழிகளைப் புலமைச்சிரத்தையோடு அணுகும் கோட்பாட்டு நிலைப்பட்ட ஆய்வு முயற்சிகளோ முழுமையான தொகுப்பு முயற்சிகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மலையகத்தின் பண்பாட்டு உருவாக்கத்திலும் அதன் இயக்கப்போக்கிலும் மலையகப் பழமொழிகளின் வகிபங்கு எத்தகையது என்பது பற்றியதான மதிப்பீட்டினை மேற்கொள்ளமுடியாமல் இருப்பதே இங்கு முக்கிய ஆய்வுப் பிரச்சினையாக இனங்காணப்படுகிறது. இவ்வாய்வானது இனவரைவியல் கோட்பாட்டு அடிப்படையில் மலையகப் பழமொழிகளைத் தேடித்தொகுத்து வகைப்படுத்தி பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் புலமைச்செயற்பாட்டினை முன்னெடுப்பதோடு மலையகப் பழமொழிகளின் ஆவணத்தொகுப்பாகவும் அமைகிறது. இதனூடாக மலையகத்தின் சமூக பண்பாட்டு உருவாக்கத்திலும் அதன் நிலைபேற்றிலும் மலையகப் பழமொழிகள் பெறும் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் தத்துவார்த்த, அழகியல் அடிப்படைகள் இங்கு ஆராயப்படுகின்றன. இதன்மூலம் மலையகப் பழமொழிகளைப் பண்பாட்டுச் சுட்டியாக அடையாளப்படுத்துவதன் மூலம் அவற்றிற்கான நிலைபேண்தகைமையினைக் கட்டியெழுப்புவதனூடாக எதிர்காலத் தலைமுறைக்கு வளமான நாட்டார் பண்பாட்டு மரபைக் கையளிப்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வானது இனவரைவியல் கோட்பாட்டு ஆய்வு அணுகுமுறை பயன்படுத்தப்படும் ஒரு பண்புசார் ஆய்வாக அமைகிறது. மலையகப் பிராந்தியமானது ஈழத்து சமூகப் பரப்பிலும் அரசியற் பரப்பிலும் தமது பண்பாடு மற்றும் மொழி சார் இருப்பினை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் துணைசெய்யும் வகையில் இருநூறு ஆண்டுகால அரசியல், பண்பாட்டு ஒடுக்குமுறைகளைச் சந்திக்கும் ஒரு இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கான அறிவார்ந்த செயல்பாட்டின் ஒரு அங்கமாகவும் இந்த ஆய்வு அமையும்.