மனித மாண்பை வலியுறுத்தும் கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப் போதனைகள்: இன்றைய உலகில் திரு அவை என்னும் ஏட்டின் மனித மாண்பு பற்றிய கருத்தியலை மையப்படுத்தியது
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of jaffna
Abstract
சமகால உலகில் மனிதன் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவிப்பதுடன்
மாண்பற்ற நிலையிலும் நடாத்தப்படுகின்றான். கடவுளின் சாயலைக் கொண்ட மனிதன்
மாண்புடன் நடாத்தப்பட வேண்டும். இதற்கமைவாக இந்த ஆய்வின் தலைப்பு தெரிவு
செய்யப்பட்டுள்ளது. பல்சமய சூழலில் மானிட சமுதாயம் வாழும் நிலையில்
கத்தோலிக்கத் திரு அவையின் மனித மாண்பு பற்றிய போதனைகள் குறிப்பிட்ட
சமுகத்திற்கு மட்டும் உரியதல்ல. மாறாக மனித குலத்திற்கே பொதுவானது என்னும்
விடயம் ஆய்வின் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. மனித வாழ்வில்
சமயங்கள் முக்கியம் பெறுகின்றன. அவற்றின் போதனைகள் மனித சமூகத்திற்கு
வலுச்சேர்க்கின்றன. எனினும் கத்தோலிக்க சமயம் இன்றைய உலகில் திரு அவை
என்னும் ஏட்டின் வழியாக மனித மாண்பு பற்றி முன்னெடுத்துள்ள கருத்துக்கள் யாவும் மானிட சமுதாயத்திற்கு பொதுவானதாகவே உள்ளன. இவை அரசியல்,
சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு என்ற மனித எல்லைகளைக் கடந்த
போதனைகளாகவே காணப்படுகின்றன. கத்தோலிக்கத் திரு அவையின் போதனைகள்
அனைத்திற்கும் அத்திவாரமாக விளங்குவது இயேசுவின் போதனைகள் ஆகும்.
படைப்பின் தொடக்கத்திலேயே ஆணும் பெண்ணுமாகப் படைக்கப்பட்டு அறிவு,
மனச்சான்று, சுதந்திரம் போன்ற பண்புகளால் தனித்துவம் பெற்றவனாக காணப்படும்
மனிதன் மாண்பு மிக்கவன். இணைந்து வாழும் பண்பினைக் கொண்ட மனிதன்
சமூகத்தில் வாழும் போது பல இன்னல்களை அனுபவிக்கின்றான். இதன் நிமித்தம்
மனிதன் மாண்பற்றவனாக நடாத்தப்படும் பல்வேறுபட்ட சூழ்நிலைகள் வரலாற்றில்
ஏற்பட்டதுடன் தற்போதும் நடந்தேறுகின்றன. இத்தகைய நிலைப்பாட்டில் கத்தோலிக்கத்
திரு அவையானது மனிதன் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்களிலிருந்து மனிதன்
பாதுகாக்கப்படவேண்டும். இறைசாயலினைக் கொண்ட மனிதன் இவ்வுலகில் சகோதர
அன்புடன் நடாத்தப்பட வேண்டும் என்பதற்காக உழைத்து வருகின்றது. கடவுளின்
மனுவுடலேற்பு மனித குலத்தின் மாண்பினை மேலும் உயர்த்தியுள்ளது. எனவே
மனித மாண்பு பாதுகாக்கப்படுவதுடன், மனிதர்கள் சமத்துவமாக நடாத்தப்பட
வேண்டும். எனவே ஆய்வின் தலைப்பிற்கேற்ப ஆய்வானது இன்றைய உலகில் திரு
அவை என்னும் ஏட்டின் மனித மாண்புக் கருத்துக்கள், இயேசுவின் போதனைகளில்
வெளிப்படும் சமத்துவப் பண்புகள், மனித சமூகத்தின் துன்பநிலையில் திரு அவையின்
பதிலிறுப்புக்கள் போன்ற விடயங்கள், வரலாற்று முறை, உய்த்துணர் முறை போன்ற
ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன. இவற்றிற்கான தரவுகளை
பெற்றுக்கொள்வதற்காக நூல்கள், சஞ்சிகைகள், சங்க ஏடு போன்றவை
பயன்படுத்தப்படுகின்றன. இவ் ஆய்வின் ஊடாக கத்தோலிக்கத் திரு அவையின்
மனித மாண்பு பற்றிய போதனைகள் மனித எல்லைகளைக் கடந்து அனைத்து
மனிதருக்கும் பொதுவானது என்னும் விடயம் ஆய்வின் மூலம் தெளிவுபடுத்தப்படுவதுடன்,
ஆய்வின் பயனாகவும் அமைகின்றது.