பூகோளமயமாதலும் தனிமனித அறநெறி நெருக்கடிகளும்: கிறிஸ்தவத் திரு அவைகளின் பிரதிபலிப்புக்கள்

Abstract

உலக மக்கள் அனைவரையும் ஒரு தனி உலக சமூகம் என்ற கட்டமைப்புக்குள் இணைவு பெறுவதற்கான அனைத்து அபிவிருத்தி செயன்முறைகளையும் உள்ளடக்கிய செயற்பாடே பூகோளமயமாக்கல் எனலாம். இச் செயற்பாடானது மானிட சமூகத்துக்கு நன்மையை உருவாக்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்காலத்தில் இச் செயற்பாடு தனிமனித அறநெறி நெருக்கடிகளை அதிகப்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பதே ஆய்வுத் தேடலுக்கு வழியமைத்தது. எனவே இதன் அடிப்படையில் ஆய்வின் மைய நோக்கமானது மனிதரின் நடைமுறை வாழ்வில் பூகோளமயமாதல் தோற்றுவித்துள்ள ஒழுக்கவியல் பிரச்சினைகளை கிறிஸ்தவத் திரு அவைகளின் அறநெறிப் போதனைகளின் ஊடாக மனித வாழ்வை மேம்படுத்தும் விடயங்களை பரிந்துரைகளாக முன்வைப்பதாகும். இதற்கென பிரதான திரு அவைகளான கத்தோலிக்க திரு அவை, அங்கிலிக்கன் திரு அவை, மெதடிஸ்த திரு அவை, அமெரிக்கன் சிலோன் மிஷன், தென்னிந்தியத் திரு அவை போன்றவற்றின் அறநெறிப் பிரதிபலிப்புக்களை மையப்படுத்தி பூகோளமயமாதலின் அடிப்படைப் பரிமாணங்களான சமூகம், பொருளாதாரம், அரசியல்;, கலாசாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்றவற்றில் அறநெறிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் விதத்தில் ஆய்வு அமையப் பெற்றுள்ளது. திரு அவைகளின் சட்டத்தொகுப்புகள், சமூகப் போதனைகள், வத்திக்கான் சங்க ஏடுகள் போன்றவற்றில் வெளிப்படும் மனித மாண்பு, மனித உரிமை, தனிமனித அறநெறிக் கருத்துக்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு தொகுத்தறிவு முறையியலைக் கையாண்டு விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் பூகோளமயமாதல் உருவாக்கியுள்ள தனிமனித நெருக்கடிகளை இனங்காண்பதற்கு அவற்றோடு தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் தரவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கிறிஸ்தவத் திரு அவைகளின் திருநிலையினர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், சுகாதாரப் பணிப்பாளர்கள், கிராமசேவகர், கூலித் தொழிலாளர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மூலம் ஆய்வுக்குத் தேவையான சமகாலப் பின்னணிக்குரிய தரவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வில் பூகோளமயமாதலால் யாழ்ப்பாண நகரத்தில் உருவாகியுள்ள தனிமனித அறநெறி சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளான யாழ்ப்பாண சமூகக் குழுக்கள் மீதான தாக்கம், சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அறநெறி நெருக்கடிகள், போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, மனித உரிமை மீறல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், பொருளாதார நெருக்கடிகள், அரசியல் பிரச்சினைகள், கலாசார ஒருமைப்படுத்தல், தொழில்நுட்பத்தின் தீமைகள், சுற்றுச்சூழல் நெருக்கடிகள் என்பன ஆய்வில் எடுத்துரைக்கப்படுகின்றன. பூகோளமயமாதலால் உருவாகியுள்ள தனிமனித அறநெறி நெருக்கடிகளை இல்லாது ஒழிக்கும் செயற்பாடுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டாலும் பூகோளமயமாதல் மூலம் உருவாகியுள்ள நெருக்கடிகளை முற்றும் முழுதாக ஒழிக்க செயற்றிட்டங்கள் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை என்பது ஆய்வின் ஊடாக அடையாளங் காணப்பட்டுள்ளது. மேலும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுக்குச் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பூகோளமயமாதலின் அடிப்படைப் பரிமாணங்களில் திட்டமிடல்களை மேற்கொள்ளும் போது கிறிஸ்தவத் திரு அவையின் அறநெறிப் பிரதிபலிப்புகளை மையப்படுத்தி முடிவுகளை மேற்கொள்ளல். மானிடர் மத்தியில் பொறுப்புடனும், பிறர் நலன் கொண்டும் செயற்படும் புதிய மனச்சான்றை உருவாக்குதல். இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தல். பூகோளமயமாதலின் அடிப்படைப் பரிமாணங்களில் இறையாட்சிப் பண்புகளை உள்வாங்குதல். கிறிஸ்தவத் திரு அவைகளின் அறநெறிப் போதனைகளை அனைத்து மக்கள் மத்தியிலும் எடுத்துரைத்து மக்கள் மத்தியில் இப் பிரச்சினைகளுக்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஏற்படுத்தவது அவசியமாகும்.

Description

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By